King Rockers Network

King Rockers Network

Breaking News

தொடரும் பணிநீக்கங்கள்.. பின்னணி என்ன? ஊழியர்களுக்கு நிறுவனங்கள் செய்ய வேண்டியது என்ன?

உலகமெங்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருந்து பணியாளர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர். இதற்குக் காரணம் என்ன, பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனங்கள் செய்ய வேண்டியவை என்ன என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம். கொரோனா தொற்றுப் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக உலகின் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களில் பெரும்பாலானவர்களைப் பணி நீக்கம் செய்து வருகிறது. இதனால், புதிய தலைமுறை பட்டதாரிகளும், நடுத்தர மக்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த திடீர் பணி நீக்கத்துக்குக் காரணம் என்ன, பணி நீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனங்கள் செய்ய வேண்டிய என்ன என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம். பணியாளர்களை நீக்கும் உலகின் முன்னணி நிறுவனங்கள் சமீபகாலமாக உலகின் முன்னணி நிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, கூகுள், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தமது ஊழியர்களைப் பெருமளவில் நீக்கி வருகின்றன. சில்லறை வர்த்தகம், நுகர்வோர் சேவை, போக்குவரத்து, நிதி, உணவு, மருத்துவம், ரியல் எஸ்டேட், கல்வி ஆகிய துறைகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே ஆப்பிள், இன்டல், லிப்ட், குவால்காம், அப்ஸ்டார்ட், விமியோ, அடோப், எச்.பி. போன்ற நிறுவனங்களும் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம் என்பது உலகம் முழுவதையும் பாதித்து இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம், தொடர்ச்சியாக தொழில்நுட்ப நிறுவனங்கள் இவ்வாறு ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவது என்பதை அவ்வளவு சாதாரணமாக எதிர்கொள்ள முடியவில்லை. பணி நீக்கத்திற்கு நிபுணர்கள் சொல்லும் 3 முக்கியக் காரணங்கள் 100ல் தொடங்கி ஆயிரக்கணக்கில் தாண்டும் இந்த பணி நீக்கமானது, திடீரென ஏற்படும் நிலநடுக்கத்தைப் போன்றதாக இருக்கிறது. இந்த திடீர் வேலை நீக்கத்துக்கு வல்லுநர்கள் பொதுவாக 3 காரணங்களைத்தான் குறிப்பிடுகின்றனர். ஒன்று, செலவினக் குறைப்பு (cost cutting). மற்றொன்று, லாபம் சரிவு. இறுதியாக, பணியாளர்களின் செயல்திறனில் தொய்வு. இவைதான் முக்கியக் காரணங்களாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இவை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். என்றாலும், பல முதலீட்டாளர்களைக் கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்கள், இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரம் அளிக்கும் நிதி முதலாளிகளைத்தான் நம்பியிருக்கின்றன. பணி நீக்க ஊழியர்களுக்கு நிறுவனம் செய்ய வேண்டியது என்ன? அப்படியான சூழலில், சர்வதேச அளவில் மந்தநிலை வரலாம் என்ற பேச்சு எழும்போது, நிதி முதலாளிகள் நிறுவனத்தின் மீது அழுத்தம் தர முயல்கின்றனர். அந்த அழுத்தமே, முதலில் ஊழியர்களின் வேலை நீக்க நடவடிக்கையாகப் பாய்கிறது. அடுத்து, உபரிச் செலவுகள் மீது தொடர்கிறது. என்றாலும், இதே நிறுவனங்கள் அடுத்த ஆண்டே மீண்டும் முழுவீச்சில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற பணி நீக்கத்தால் பெரும்பாலும் புதிய தலைமுறை பட்டதாரிகளும், நடுத்தர வர்க்கத்தினரும், சாமானியர்களும்தான் அதிகம் பாதிக்கப்படுவதாகச் சொல்லும் நிபுணர்கள், ஒரு நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கிறது என்றால், அந்த நிறுவனம் தன்னுடைய வளர்ச்சியையும் லாபத்தையும் பொறுத்து வேலை நீக்க ஊழியர்களுக்கான பணப் பாதுகாப்பை அளிக்கும் வகையில் சட்டத்திட்டங்களை வகுக்க வேண்டும்” என அறிவுரையும் கூறுகின்றனர். இதுவரை பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பட்டியல் குறித்து படிக்க இங்கே க்ளிக் செய்யவும். - ஜெ.பிரகாஷ்
http://dlvr.it/SlLD96

No comments