King Rockers Network

King Rockers Network

Breaking News

‘வராரு... டக் அவுட் ஆகி போயிடறாரு’- SKY-க்கு முன்பே இத்தனை பேருக்கு இது நடந்திருக்கா?

மூன்று போட்டிகளில் தொடர்ந்து இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (SKY), டக் அவுட் முறையில் வீழ்ந்திருப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், இதற்கு முன்பு இதுபோன்ற டக்-அவுட்டாகி வீழ்ந்தவர்கள் பற்றி இங்கு அறியலாம். டி20 போட்டிகளில் தன்னுடைய முத்திரை பதிக்கக்கூடிய பல அற்புதமான ஷாட்களால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ். இவர் இந்தியாவின் 360 வீரர் என்றும் அழைக்கப்படுகிறார். டி20 போட்டிகளில் 3 சதங்களை பதிவு செய்து, கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அடித்தபடியாக அதிக டி20 சதங்களை அடித்த இந்திய வீரராகவும் இருக்கிறார். மிகக்குறைவான டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்து விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து ஐசிசியின் நம்பர் 1 டி20 வீரராகவும் ஜொலித்து வருகிறார். 46 டி20 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் மற்றும் 13 அரைசதங்களை அடித்திருக்கும் அவர், டி20யில் 46 ரன்கள் என்ற சராசரியுடன் இருந்துவருகிறார். ஆனால், என்னதான் டி20 போட்டிகளில் ஜொலித்து வந்தாலும், தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய வாய்ப்பை பயன்படுத்திகொள்ளாமல் சொதப்பியே வருகிறார். இது, தற்போது முடிந்த ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது வெட்டவெளிச்சமாகவே தெரிந்தது. மூன்று போட்டிகளிலும் கோல்டன் டக்! ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி தொடரில் இடம்பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ், தொடர்ந்து 3வது முறையாக டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தார். கடந்த மார்ச் 17ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியிலும், மார்ச் 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததுடன், தொடர்ந்து இரண்டு போட்டிகளிலும் அவர் டக் அவுட் முறையில், அதிலும் முதல் பந்திலேயே அவுட்டானது, கடுமையான விமர்சனத்துக்குள்ளனது. ஆனாலும் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு 3வது போட்டியிலும் வாய்ப்பை வழங்கினார். மார்ச் 22ஆம் தேதி, சென்னையில் நடைபெற்ற அந்தப் போட்டியிலும் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் முதல் பந்திலேயே போல்டாகியதுடன் டக் அவுட் முறையில் வெளியேறினார். இதன்மூலம் தொடர் ஒன்றில் ஓர் அணிக்கு எதிராக தொடர்ந்து 3 முறை டக் அவுட் ஆன பட்டியலில் சூர்யகுமாரும் இடம்பிடித்தார். ஏதோ, இந்தச் சாதனையை(!) சூர்யகுமார் யாதவ்தான் முதல்முறையாகச் செய்துகொண்டதாக ரசிகர்கள் பேசிக்கொண்டனர். ஆனால், இதற்கு முன்பு ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே, தொடர்ந்து 3 முறை டக் அவுட்டாகி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 1994ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியிலும், அதைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 2 போட்டியிலும் டக் அவுட் முறையில் வீழ்ந்திருந்தார். அதுவும், அந்த ஆண்டில்தான் முதல் சதத்தைப் பதிவு செய்திருந்தார். அதற்குப் பிறகுதான் சச்சினுக்கு இந்தச் சோதனை ஏற்பட்டது. அவர் மட்டுமல்ல, இன்னும் 4 இந்திய வீரர்கள் (அனில் கும்ப்ளே (1996), ஜாகீர்கான் (2003-04), இஷாந்த் சர்மா (2010-11), ஜஸ்ப்ரித் பும்ரா (2017-19) அந்தப் பட்டியலில் உள்ளனர். ஆனால், இதில் என்ன வித்தியாசம் என்றால் அந்த வீரர்கள் எல்லாம் இரண்டாவது பந்து மற்றும் அதற்கு மேற்பட்ட பந்துகளைச் சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகியுள்ளனர். ஆனால், சூர்யகுமார் யாதவ், 3 போட்டிகளிலும் முதல் பந்திலேயே வீழ்ந்துள்ளார். இதுதான் பெரிய வித்தியாசம். இதிலும் இன்னொரு இந்திய வீரர் இணைந்துள்ளார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டிகளில் வாஷிங்டன் சுந்தர், தொடர்ந்து 3 முறை முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியிருக்கிறார். அவர் மேற்கிந்திய தீவுகள், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இந்த முறையில் அவுட் ஆகியுள்ளார். அதேநேரத்தில், சர்வதேச அளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 3 முறை முதல் பந்திலேயே டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவுக்கு முன்பு 13 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் விவரம், இதோ... 1. டோனி பிளேய்ன், நியூசிலாந்து (1986)2. அலெக் ஸ்டூவர்ட், இங்கிலாந்து (1989-90)3. இயான் பிளாக்வெல், இங்கிலாந்து (2003)4. நிகோலஸ் டி குரூட், கனடா (2003)5. வியூசி சிபண்டா, ஜிம்பாப்வே (2003)6. டைன்சே பனயங்கரா, ஜிம்பாப்வே (2003)7. ஆண்ட்ரு சைமண்ட்ஸ், ஆஸ்திரேலியா (2003)8. பிரட் லீ, ஆஸ்திரேலியா (2009)9. ஷேன் வாட்சன், ஆஸ்திரேலியா (2009)10. ஜேம்ஸ் நோட்சே, கென்யா (2010)11. தேவேந்திரா பிஸ்கூ, மேற்கிந்திய தீவுகள் (2011)12. அலெக்ஸ் குஷாக், அயர்லாந்து (2012-13)13. பிளெஸிங் முஜார்பனி, ஜிம்பாப்வே (2021)14. சூர்யகுமார் யாதவ், இந்தியா (2023) - ஜெ.பிரகாஷ்
http://dlvr.it/SlPDHY

No comments